மேற்கு வங்கத்தில் ஆறு மாதங்களுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'நில ஜிஹாத்' ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் ஐ தொடர்ந்து இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய 2வது மாநிலமாக குஜராத் அண்மையில் உருவெடுத்தது. இந்நிலையில் அதே மாதிரியில் மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என சுவேந்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர் அசோக் சிங்காலின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் சுவேந்து அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு பேசிய அவர், "இந்தியக் கலாச்சாரம், பழம்பெரும் மரபுகள், கோயில்கள், மடாலயங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள் மீதான தாக்குதல்களை அரசு பொறுத்துக்கொள்ளாது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதாலேயே வீழ்ந்தது.
எந்தச் சூழ்நிலையிலும் இங்கு தேசவிரோதச் செயல்கள் நடைபெற இந்த அரசு அனுமதிக்காது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.
எங்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்; உத்தரகாண்ட் மற்றும் குஜராத்தைப் போன்று பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம்.
மேலும், லவ் ஜிஹாத் மற்றும் லேண்ட் ஜிஹாத்துக்கு எதிராக வலுவான சட்டங்களையும் இயற்றுவோம்" என தெரிவித்தார்.
மேலும், வரும் நவம்பர் மாதம் நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் 20,000 பங்கேற்பாளர்களுடன் அனுமன் சாலிசா பாராயணமும், டிசம்பர் 29 அன்று 10 லட்சம் பங்கேற்பாளர்களுடன் மகா கீதை பாராயணமும் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மற்றும் தத்தெடுப்பு போன்ற விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான உயர்மட்டக் குழுவை மாநில அரசு ஏற்கனவே அமைத்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.