இந்தியா

ஜந்தர் மந்தரில் அத்துமீறி போராட்டம் - சிஜேபி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு

ஜந்தர் மந்தர் வழக்கில், சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்க்யா ஷிண்டே ஆகியோர்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

டெல்லியில் போராட தடை விதிக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகளான செளரவ் தாஸ், அஷூதோஷ் ரங்கா மற்றும் அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்ட பலரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து சிஜேபி நிர்வாகிகள் நாட்டில் அமைதியை காக்கும்படி நிபந்தனையுடன் நீதிமன்றம் விடுதலை செய்தது.

போராட்டத்திற்கு தடை

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்து, அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக டெல்லி காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி நிர்வாகிகளான செளரவ் தாஸ், அஷூதோஷ் ரங்கா மற்றும் அஜிங்க்யா ஷிண்டே ஆகியோர்களை தடுப்புக் காவலில் போலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிஜேபி நிர்வாகிகள் கைது

இந்த கைது நடவடிக்கை குறித்து சிஜேபி-யின் சட்ட குழு தலைவர் ரத்னா சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜந்தர் மந்தர் வழக்கில், சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்க்யா ஷிண்டே ஆகியோர்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

அத்துமீறல், பிணை நிபந்தனை மீறல், அரசு அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் போன்றவை இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

திகார் சிறையில் அடைக்க வாய்ப்பு

இவர்கள் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட வாய்ப்புள்ளது.

நள்ளிரவு வரை அவர்கள் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அதிகாலை 3 மணிக்கு ஒரு தனியார் வேனில் அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அவர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT