இந்தியாவில் தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறியுள்ள ஆதார் சேவைகளைப் பொதுமக்கள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில் 5 புதிய திட்டங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற 17-வது ஆதார் தினத்தை முன்னிட்டு UIDAI சார்பில் நடத்தப்பட்ட 'ஆதார் சம்வாத்' நிகழ்ச்சியில் இந்த அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது முதல் அரசின் நலத்திட்ட உதவிகள் வரை ஆதார் பிரதானமாக உள்ள நிலையில், இந்த வசதிகள் பொதுமக்களுக்குப் பெருமளவில் உதவிகரமாக இருக்கும்.
இ-பிடிஎஸ் எனப்படும் மின்னணு பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெறுவோர், இனி பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை வைப்பதற்குப் பதிலாக தங்களது முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.
முதியவர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு விரல் ரேகை சரியாகப் பதியாத பட்சத்தில், இந்த முக அடையாள முறை மிகப்பெரிய தீர்வாக அமையும்.
ஆதார் சரிபார்ப்பு சேவைகளைப் பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறும் நடைமுறையை எளிதாக்கும் மற்றும் வெளிப்படைத்தன்மையாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ‘ஸ்விக் போர்ட்டல் 2.0' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான திருத்தங்கள் மற்றும் சிறப்புச் சேவைகளுக்காக பொதுமக்கள் UIDAI-யின் மாநில மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களின் வருகையைச் சீராக நிர்வகிக்கும் வகையில் புதிய டிஜிட்டல் டோக்கன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் அவதி குறையும்.
குறைந்த எண்ணிக்கையிலான ஆதார் சரிபார்ப்புகள் மட்டுமே தேவைப்படும் சிறு அரசுத் துறைகள் மற்றும் தகுதி பெற்ற அரசு சாரா நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகப் பிரத்யேகமான துணைத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது அந்த நிறுவனங்களின் பணிகளை விரைவுபடுத்த உதவும்.
ஆதார் தொடர்பான தகவல்கள், பதிவிறக்கங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளைப் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி மிக எளிதாக அணுகும் வகையில், யுஐடிஏஐ அதிகாரப்பூர்வ இணையதளம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளைத் துரிதமாகப் பெற முடியும்.
ஆதார் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த 5 புதிய திட்டங்களும் இந்திய டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.