திருவனந்தபுரத்தில் இன்று சிபிஐ மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
கேரளாவில் புதியதாக அமையவுள்ள UDF அரசின் பதவியேற்பு விழா மே 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் எதிர்க்கட்சியான எல்.டி.எஃப் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என்று எம்.வி. கோவிந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இடதுசாரி முன்னணி ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் தலைமையிலான UDF முன்னணி விழாவைப் புறக்கணித்தது. ஆனால், தற்போதைய இடதுசாரி முன்னணி பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்பதால் விழாவில் அனைவரும் பங்கேற்பதாக கூறியுள்ளார்.
சரியானதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, தவறானதை வன்மையாக விமர்சிப்பதன் மூலம் இடதுசாரிகள் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள் என்று கோவிந்தன் கூறினார்.
கேரளாவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பினராயி விஜயன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் முதலமைச்சரை அறிவித்த உடனே, நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரை அறிவித்துவிட்டோம். முதலமைச்சர் என்று ஒருவர் இல்லாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன வேலை என்று அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சந்தித்த பெரும் தோல்விக்கான காரணங்கள் குறித்து, தெளிவான புரிதலை எட்டுவதற்காக, கட்சிக்குள் பல்வேறு மட்டங்களில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கோவிந்தன் கூறினார்.
கேரளாவில் இடதுசாரி முன்னணியின் செல்வாக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்ற ஊடகங்களின் செய்திகளை அவர் மறுத்தார்.
தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, எல்.டி.எஃப் கூட்டணி மீண்டும் பிரம்மாண்டமாகத் திரும்பும் என்று அவர் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.