இந்தியா

பி.எஸ்.என்.எல். கேபிள் குழாய் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழப்பு: புனேயில் சோகம்

பிஎஸ்என்எல் குழாய் பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள் இருவர் உயிரிந்தனர்.

மகாராஷ்டிராவில் பி.எஸ்.என்.எல். பணிக்காக நிலத்தடி குழாய் பதித்து கொண்டிருந்த இரண்டு துப்புரவு பணியாளர்கள் மயக்கமடைந்த நிலையில் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நிலத்தடி குழாய் பதிப்பு

மகாராஷ்டிராவின் நிக்டி பிரதிகரன் பகுதியில் உள்ள லோக்மான்யா மருத்துவமனைக்கு அருகே ஒரு நிலத்தடிக்குள், சித்தேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மனோஜ் பாபுராவ் ஷிண்டே மற்றும் 19 வயதான அமோல் அசோக் ஷிண்டே ஆகியோர் குழாய் பதிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து குழிக்குள் சென்றவர்கள் மேலே வராததால், இரவு 11:45 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.

பின்னர் குழிக்குள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை மீட்டு யஷ்வந்த்ராவ் சவான் நினைவு (ஒய்.சி.எம்) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

காவல் ஆய்வாளர்

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து நிக்டி காவல் ஆய்வாளர் மகேஷ் பன்சோடே கூறுகையில், “நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களை மீட்டு ஒய்.சி.எம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்கு வந்தடைந்தபோதே இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இறந்தவர்கள் எந்த சூழ்நிலையில் குழிக்குள் சென்றார்கள் மற்றும் அந்த பணிக்கு யார் பொறுப்பு என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.

அந்த குழாய் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது, காவல்துறையினர் பிஎஸ்என்எல் அதிகாரிகளிடமும் விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும், இறந்தவர்கள் பிஎஸ்என்எல் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தனரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தொழிலாளர்கள் மூச்சுத்திணறல், ஆக்சிஜன் பற்றாக்குறை, நச்சு வாயுக்களின் தாக்கம் அல்லது பிற காரணங்களால் இறந்தார்களா என்பதை கண்டறிய, காவல்துறை மருத்துவ மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காக காத்திருக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக நிக்டி காவல் நிலையத்தில் கவனக்குறைவான மரணம் விளைவித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தற்போது பதிவான இரண்டு மரணங்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

உயிரிழப்பு 5-ஆக உயர்வு

கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று, சின்ச்வாடைச் சேர்ந்த 35 வயதான லக்கன் தவாரே மற்றும் 38 வயதான தத்தாத்ரே வனாலே மற்றும் பிஜலிநகரைச் சேர்ந்த 35 வயதான சாஹேப்ராவ் கீர்ஷேட்டே ஆகிய மூன்று பேர் குழாய் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், நிலத்தடி பயன்பாட்டு குழிக்குள் நுழையும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.