இந்தியா

தெலுங்கானாவில் ஒன்றாக மதுகுடித்த 2 பெண்கள் திடீர் மரணம்

இருவரும் கதை பேசிக்கொண்டே மதுவை ஆனந்தமாக குடித்தனர். குடித்த சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்து சுருண்டு மயங்கி விழுந்தனர்.

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் மர்ரிபெடா மண்டலத்தில் உள்ள புக்கியா தண்டா கிராமத்தை சேர்ந்தவர் சாரதா (வயது 40). இவர் தனது மகனுடன் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். திரும்பி வரும் பொழுது சூர்யா பேட்டையில் உள்ள ஒரு மதுபான கடையில் மது வாங்கினார்.

வீட்டுக்கு திரும்பி வந்ததும் இரவு சாரதா அவரது தோழி நீலா (42 ) என்பவருடன் மது குடித்தார். இருவரும் கதை பேசிக்கொண்டே மதுவை ஆனந்தமாக குடித்தனர். குடித்த சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்து சுருண்டு மயங்கி விழுந்தனர். குடும்ப உறுப்பினர்கள் அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் பெண்கள் உடல்களை மீட்டு பீரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அருந்திய மதுவில் யாராவது விஷம் கலந்தார்களா? அல்லது கள்ளச்சாராயம் கலந்த மதுவா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.