இந்தியா

ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட 2 சகோதரிகள் அடுத்தடுத்து பலி!

உயிரிழப்புக்கு உணவு நச்சு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்தவர் வைஜிநாத், இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதியினர், பிழைப்புக்காக ஹைதரபாத்தில் தங்கி வேலைசெய்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள்.

இச்சூழலில் இவர்களது உறவினர் ரேணுகா என்பவர், சமீபத்தில் நாராயணகுடாவில் உள்ள ஜல்மண்டலி அலுவலகம் அருகே மாம்பழங்கள் வாங்கி வந்துள்ளார். இந்த மாம்பழத்தை இந்துமதியும், அவரது 4 மகள்களும் சாப்பிட்டுள்ளனர்.

மாம்பழம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென வயிற்று வலி, வாந்திப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரும் கச்சிகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜிநாத்தின் 3-வது மகள் புவனேஸ்வரி (வயது 17) திங்கள்கிழமையன்று உயிரிழந்தார். மறுநாள் இளைய மகள் சந்தியா (10) இறந்தார்.

இந்துமதி மற்றும் மற்ற 2 மகள்களின் உடல்நிலை சீராக உள்ளது. சிறுமிகளின் மரணம் குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாராயணகுடா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாம்பழங்களைச் சாப்பிட்ட பிறகு, சகோதரிகள் உடல்நலம் குன்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்த உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் பிற அறிக்கைகள் கிடைத்த பின்னரே சகோதரிகளின் மரணம் குறித்த தெளிவு கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் உயிரிழப்பிற்கு மாம்பழம்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.