தெலுங்கானா ஆதிலாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்கசிவால் ஏ.சி வெடித்து, புகை மூட்டத்தில் மூச்சுத்திணறிய இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. 27 குழந்தைகள் காயமடைந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். பெற்றோர்கள் பதற்றத்தில் குழந்தைகளை தூக்கி ஓடிய நிலையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது; கலெக்டர் ஆய்வு செய்து, முதல்வர் உயர் சிகிச்சை உத்தரவிட்டார்.
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
நேற்றிரவு பிரசவ வார்டில் குழந்தைகள் தாய்மார்கள் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீர் மின்கசிவு ஏற்பட்டு அங்கிருந்த ஏ.சி திடீரென வெடித்தது. இதனால் பிரசவ வார்டு முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதில் மூச்சு திணறி பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையும், மற்றொரு குழந்தையும் இறந்தது. ஏ.சி வெடித்ததால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு அலறி அடித்தபடி வார்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். ஏ.சி. வெடித்ததில் 27 குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகளை தனியார் ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர். ஏ.சி வெடித்தது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் ஷாஜர்ஷி ஷா ஆஸ்பத்திரிக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிக்க முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.