பீகாரில் சட்ட மேலவை தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற இருவரை பாஜக தன் கட்சியில் இணைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும், பீகாரில் 8 இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், மகாராஷ்டிராவில் 5 இடங்களுக்கும் கடந்த அக்டோபர் 23 அன்று சட்ட மேலவை தேர்தல் நடைபெற்றது.
வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலின் இறுதி முடிவுகளில், பாஜக, ஆர்ஜேடி மற்றும் சுயேச்சைகள் தலா இரண்டு இடங்களை வென்றனர்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பிரசாந்த் கிசோரின் ஜன் சூராஜ் கட்சி தலா ஒரு இடத்தைக் கைப்பற்றின.
இந்நிலையில் பீகார் மேலவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 சட்டசபை மேலவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்.
திருஹாட் பட்டதாரி தொகுதியில் வெற்றி பெற்ற பன்சி தார் பிரஜ்வாசியும், சரண் ஆசிரியர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் ராஜும் நேற்று பாட்னாவில் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் சரோகி முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
ராகுல் ராஜ் பாஜகவில் இருந்தவர் ஆவார். அவருக்கு பதிலாக வேறொரு வேட்பாளர் சரண் தொகுதியில் நிறுத்தப்பட்டதால் ராகுல் ராஜ் சுயேட்சையாக களமிறங்கினார். சுயேச்சையாக போட்டியிட்டதற்காக, ராகுல் ராஜை பாஜக கட்சியிலிருந்து நீக்கியிருந்தது.
ஆனால் சுயேச்சையாக போட்டியிட்ட ராகுல் ராஜ், ஜேடியு வேட்பாளர் ஆனந்த் புஷ்கரை தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார்.
பன்சி தார் பிரஜ்வாசி, திருஹாட் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஜேடியு வேட்பாளர் அபிஷேக் ஜாவை 9,147 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தற்போது இந்த இரண்டு சுயேச்சைகள் பாஜகவில் இணைந்துள்ளதால், சட்டசபை மேலவையில் பாஜகவின் பலம் 26 ஆக அதிகரித்துள்ளது.
சுயேச்சையாக வெற்றி பெற்ற 2 புதிய சட்ட மேலவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைவதை ராஷ்ட்ரிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. இது அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும் என்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் செய்தித் தொடர்பாளருமான சக்தி சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
"சுயேச்சையாக வெற்றி பெற்ற இரண்டு சட்ட மேலவை உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பே பாஜகவில் இணைவது முற்றிலும் சட்டவிரோதமாகும்.
கட்சித் தாவல் தடைச் சட்டம் இத்தகைய இணைப்பை அனுமதிக்கிறதா? இது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு இணக்கமானதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மறுபுறம் தன்னுடன் கூட்டணியில் உள்ள ஜெடியு பலமாக உள்ள தொகுதிகளில் பாஜகவே இந்த இரு வேட்பாளர்களை சுயேட்சையாக நிறுத்தி ஜெடியுவை தோற்கடித்து அவர்களை தற்போது பாஜகவில் இணைத்துக்கொண்டு தன் பலத்தை மேலவையில் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் சக்தி சிங் யாதவ் முன்வைத்துள்ளார்.
இது என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஜேடியுவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். மாநிலத்தில் ஜேடியுவை பாஜக பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இது ஜேடியுவுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்றும் சக்தி சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்
கடந்த 20 ஆண்டுகளாக பீகார் முதலமைச்சராக இருந்த ஜெடியு தலைவர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் என்டிஏவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
ஆனால் சில மாதங்களிலேயே ராஜ்யசபா எம்.பி சீட்டை ஏற்றுக்கொண்டு அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவின் சாம்ராட் சவுத்ரி முதலமைச்சரானார்.
இது மாநில கட்சியான ஜெடியுவை பலவீனப்படுத்தும் பாஜகவின் தந்திரம் என்று விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.