இந்தியா

உ.பி.யில் 1½ வயது குழந்தையை கடத்திய கும்பலை சுட்டுப்பிடித்த போலீசார்: மற்றொரு சம்பவத்தில் 17 வயது சிறுவன் மீட்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் காணாமல் போன குழந்தை மற்றும் சிறுவனை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு வேறு குழந்தை கடத்தல் சம்பவங்களில், கடத்தப்பட்ட சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுவன் ஒருவன் திடீரென காணாமல் போனான். இதுகுறித்து அவனது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், அப்பகுதியில் குழந்தை கடத்தலில் ஈடுபடும் ஒரு கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருவதும், அவர்கள்தான் இந்த சிறுவனை கடத்தியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கடத்தல் கும்பலை சேர்ந்த 4 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப் பட்டான்.

கைது செய்யப்பட்ட நால்வரும் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் தொடர்ந்து குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டம் மனௌனா கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று கடந்த மே 24-ந்தேதி கடத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தெற்கு காவல் கண்காணிப்பாளர் அன்ஷிகா வர்மா, குழந்தையை மீட்க 5 தனிப்படைகளை அமைத்தார்.

போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை கண்காணித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கடத்தப்பட்ட குழந்தையை விற்பனை செய்வதற்காக இருவர் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஹூலாசி படக் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த யோகேஷ் மற்றும் பவன் ஆகிய இருவரை போலீசார் வழிமறித்தனர். உடனே அவர்கள் தப்பியோட முயன்றதோடு, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

தற்காப்பிற்காக போலீசார் நடத்திய பதிலடி துப்பாக்கிச் சூட்டில், கடத்தல்காரர்கள் இருவரின் கால்களிலும் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவர்களை பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை பத்திரமாக மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த குற்றவாளிகளுக்கு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.