தெலங்கானா சபாநாயகர் கதம் பிரசாத் குமார்
இந்தியா

சபாநாயகருக்கு எதிராக இழிவான பேச்சு: இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கைது

தெலுங்கானா மாநில சபாநாயகரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் பிஆர்எஸ் கட்சியின் இரண்டு மேலவை எம்.எல்.ஏ.-க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநில சட்டசபைக்குள் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் நுழைய முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பி.ஆர்.எஸ். மேலவை எம்.எல்.ஏ.-க்கள் தத்தா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது.

இது தொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கான சிறப்புப் பணி ஆதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் இரண்டு எம்.எல்.ஏ.-க்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் (இரண்டு BRS சட்டமன்ற உறுப்பினர்கள்) சபாநாயகரின் நேர்மை, அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடத்தையை பகிரங்கமாக கேள்விக்குட்படுத்தியுள்ளனர். சமூகப் பின்னணி மற்றும் அரசியலமைப்புப் பாத்திரத்தின் காரணமாக அவரை அவமானப்படுத்தவும், இழிவுபடுத்தவும், தரக்குறைவாக நடத்தவும், அவரது தனிப்பட்ட மற்றும் சமூக அந்தஸ்தைக் குறைக்கவும் திட்டமிட்ட சொற்களை வேண்டுமென்றே பயன்படுத்தினர் என புகாரில் கூறப்பட்டிருந்தது.

சபாநாயகர் கதம் பிரசாத் குமார்

நேற்று தலித் தலைவரான சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு எதிராக இருவரும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இரண்டு பேரின் கருத்து 4 கோடி மக்களை இழிவுப்படுத்துவதாகும் என்றார். என்றாலும், இருவரும் சபாநாயருக்கு எதிராக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.

SCROLL FOR NEXT