இந்தியா

த்விஷா ஷர்மா கொலை வழக்கு | சிபிஐ முன்பு சம்பவத்தை மீண்டும் நடித்து காட்டிய சமர்த் சிங் மற்றும் கிரிபலா சிங்

மாடல் அழகி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த த்விஷா ஷர்மா மாடல் அழகியாகவும் நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து ஒரு மாததிற்கு முன்பு போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் த்விஷா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டது.

தனது மகளை வரதட்சணை தொடர்பாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் கேமரா காட்சிகளில் முரண்பாடு உள்ளதாகவும் பெண்ணின் தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து தலைமறைவான பெண்ணின் கணவர் சமர்த் சிங் மற்றும் சமர்த்தின் தாயார் கிரிபலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த விசாரணையை முதன்மை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றுவதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியது.

ஏற்கனவே இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள த்விஷா சர்மாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருக்கும் நிலையில் கிரிபலா சிங்கும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து த்விஷா ஷர்மா இறந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் நீதிபதி கிரிபலா சிங்கின் வீட்டில் சிபிஐ குற்ற நிகழ்விடத்தை மீண்டும் உருவாக்கியது.

அப்போது சம்பவம் நடந்த நேரத்தில் அங்கிருந்த நபர்களின் நிலைகளையும் அசைவுகளையும் உருவகப்படுத்துவதற்காக, மத்திய புலனாய்வாளர்கள் பொம்மைகளையும் சாக்குகளையும் பயன்படுத்தினர்.

இதன்மூலம் சம்பவங்களின் வரிசையை மீண்டும் கட்டமைக்கவும், விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களைச் சரிபார்க்கவும் மத்திய புலனாய்வாளர்கள் முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT