முன்னாள் 'மிஸ் புனே' அழகி த்விஷா சர்மா மரண வழக்கில், கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த அவரது கணவர் சமர்த் சிங், இன்று ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
33 வயதான த்விஷா சர்மா, கடந்த மே 12 அன்று போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
த்விஷாவின் பெற்றோர் அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்தனர்.
சமர்த் சிங்கின் குடும்பத்தினர் த்விஷாவுக்கு போதைப்பொருள் பழக்கம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறி இக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
த்விஷா சர்மாவின் இந்த மர்ம மரணவழக்கு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, போபால் உள்ளூர் நீதிமன்றம் சமர்த் சிங்கின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.
முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான சமர்த் சிங்கை பிடிக்க காவல்துறை ரூ.30,000 வெகுமதியும் அறிவித்திருந்தது.
இதனிடையே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியும் மத்தியப்பிரதேச அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த சமர்த் சிங், ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
ஜபல்பூரில் ஆஜரான சமர்த்தை போபால் நீதிமன்றத்திலோ அல்லது கடாரா காவல் நிலையத்திலோ சரணடையுமாறு அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு ஒத்திவைத்தது.