இந்தியா

த்விஷா சர்மா வழக்கு: கணவரைத் தொடர்ந்து மாமியாரையும் காவலில் எடுத்தது சிபிஐ!

த்விஷா சர்மாவின் மாமியார் கிரிபாலா சிங்கை போபாலில் இன்று கைது செய்தது சிபிஐ.

மாடல் மற்றும் நடிகையான த்விஷா ஷர்மாவின் மரண வழக்கில், அவரது மாமியாரும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ அதிகாரிகள் போபாலில் இன்று கைது செய்துள்ளனர்.

கிரிபாலா சிங்கிற்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ரத்து செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை சுமார் 10:30 மணியளவில், மூன்று பேர் கொண்ட சிபிஐ குழு கிரிபாலா சிங் இல்லத்திற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தியது. சுமார் 7 மணி நேரம் தீவிர விசாரணை மற்றும் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் முன்ஜாமினை ரத்து செய்ய, விசாரணைக்கு ஒத்துழைக்காதது மற்றும் ஆதாரங்களை கலைக்க முயன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மாலை 5:10 மணிக்கு அவரை கைது செய்தது. இந்த வாரத் தொடக்கத்தில் வழக்கை கையிலெடுத்த சிபிஐ, தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கிரிபாலா சிங்கிற்கு கீழ் நீதிமன்றம் வழங்கியிருந்த முன் ஜாமினை எதிர்த்து த்விஷாவின் குடும்பத்தினரும், மாநில அரசும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், முன் ஜாமினை ரத்து செய்தது.

ஏற்கனவே இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள த்விஷா சர்மாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருக்கும் நிலையில் இன்று கிரிபாலா சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி

முன்னாள் ‘மிஸ் புனே’ அழகியும், நடிகையுமான த்விஷா ஷர்மா (33), கடந்த மே 12 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆரம்பத்தில் இது தற்கொலை என்று கூறப்பட்டாலும், த்விஷாவின் குடும்பத்தினர் இதை வரதட்சணை கொடுமை மற்றும் திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டினர்.

நொய்டாவைச் சேர்ந்த த்விஷா ஷர்மா, போபாலைச் சேர்ந்த வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவரை 2025 டிசம்பரில் திருமணம் செய்தார். சமர்த் சிங்கின் தாயார் கிரிபாலா சிங், ஒரு ஓய்வுபெற்ற செஷன்ஸ் நீதிபதி.

திருமணமான 5 மாதங்களிலேயே த்விஷா கடுமையான வரதட்சணை கொடுமை, மனரீதியான சித்திரவதை மற்றும் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

SCROLL FOR NEXT