மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷீத்லா மாதா கோயில் அருகே நவாராத்திரி விழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய திரண்டிருந்த பக்தர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று புகுந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குவாலியர் மாவட்டம் சினோர் பகுதியில் இருந்து நெல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, அப்பகுதியில் உள்ள செங்குத்தான சரிவுப் பாதையில் வந்து கொண்டிருந்தது. இப்பகுதியில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில் வந்து கொண்டிருந்த அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் தடுப்புச் சுவர்களையும், சோதனைச் சாவடியையும் அடித்து நொறுக்கிக் கொண்டு சாலையில் நின்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக மோதியது. அதுமட்டுமின்றி, அருகில் இருந்த கோயிலின் வெளிப்புற சுவர் மற்றும் பிரதான வாயில் மீதும் மோதி நின்றது.
இந்த விபத்து குறித்து குவாலியர் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் தெரிவிக்கையில், நவாராத்திரி பண்டிகையை ஒட்டி ஷீத்லா மாதா கோயிலில் பெருமளவில் பக்தர்கள் திரண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது என்றார். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அவசர ஊர்திகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு மீட்டுச் சென்றனர்.
ஒட்டுமொத்தமாக 39 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 முதல் 6 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து குவாலியர் மாவட்ட ஆட்சியர் ருச்சிகா சவுகான் கூறுகையில், நவாராத்திரி திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் சிறப்புப் போலீஸ் சோதனைச் சாவடிகளும் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட அந்தப் பாதைக்குள் கனரக லாரிக்குள் எப்படி நுழைந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், லாரியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு அல்லது பிரேக் ஃபெயில் காரணமா என்பதை கண்டறிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக தொழில்நுட்பக் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவிழா கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த இந்த பேரிடர் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.