டெல்லியில் வாடிக்கையாளர் ஒருவர் 10 ரூபாய் கிழிந்த தாள் கொடுத்த தகராறில் டெலிவரி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கல்யாண்புரி பகுதியைச் சேர்ந்த 24 வயதான சமீர் ஹுசைன் சைஃபி என்பவர், பிளிப்கார்ட் மினிட்ஸ் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிவரி வழங்கச் சென்றபோது, வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த 10 ரூபாய் தாள் கிழிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அவர் மாற்றிக் கேட்க, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றிய நிலையில், வாடிக்கையாளரும் அவரது தரப்பினரும் சேர்ந்து சமீரை பொதுவெளியில் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த எவரும் அவரை மீட்க முன்வரவில்லை என்றும், பார்வையாளர்களாகவே வேடிக்கை பார்த்ததாகவும் அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு சமீர் காவல்துறையில் முறையிட்டுள்ளார். ஆனால், காவல் துறையின் தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புகாரை அவர்கள் அலட்சியம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சமீர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு 16 நாட்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்பு சமீர் பதிவு செய்த இறுதி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பொதுமக்களின் அஜாக்கிரதையையும், காவல்துறையின் மெத்தனப் போக்கையும் அவர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.