இந்தியா

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக கவர்னர் அர்லேகர்

முதலமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் கடந்த 3 நாளாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், கவர்னர் அர்லேகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தார்.

சட்டம் -ஒழுங்கு

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்து உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மிகவும் சீரியசாக வெடித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரே நாளில் 11 கொலை சம்பவங்கள் நடந்தது. இந்த கொலையில் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளரும் அடங்கும். இதனால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர். கொலைகள் அதிகரித்து வரும் சூழலில் மறுபுறம் சிறுமி காணாமல் போன சம்பவங்களும் நடந்தது.

இது தவிர, மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. மீது கிளம்பிய குற்றச்சாட்டு, சட்டசபை துணை சபாநாயகர் எம்.ரவி சங்கர் பொது பிரச்சனை சம்பந்தமாக புகார் செய்ய வந்த ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவமும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆலோசனை

இதனால் முதலமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் கடந்த 3 நாளாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆகியோருடன் சட்ட ஒழுங்கு நிலவரம் பற்றியும் சமீபத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும் காவல் துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக கேட்டறிந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து தமிழக அரசிடம் அறிக்கை பெற்று தருமாறு கவர்னர் ஆர்.வி.அர்லேகருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

டெல்லி சென்றார்

அதன் அடிப்படையில் தமிழக கவர்னர் அர்லேகர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக கவர்னர் சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த விவரங்களை அமித்ஷாவிடம் கவர்னர் அர்லேகர் விரிவாக விவாதித்தாக கூறப்படுகிறது.

அமித்ஷாவை சந்திப்பிற்கு பின் கவர்னர் அர்லேகர் இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சி யில் பங்கேற்றுவிட்டு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை திரும்புகிறார்.

SCROLL FOR NEXT