இந்தியா

ஒடிசாவில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 3 வயது யானைக்குட்டி - பொதுமக்கள் கோரிக்கை

ஒடிசாவில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 3 வயது யானைக்குட்டியை மீட்புக் குழுவினர் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.

ஒடிசாவில் ஊருக்கு வெளியே பாழடைந்த நிலையில் ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது ஆண் யானை குட்டியை, அந்த பகுதியில் வசிக்கும் கிராமத்தினர், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உதவியுடன், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.

பாழடைந்த கிணறு

ஒடிசா மாநிலம் தேன்கனால் மாவட்டத்தில உள்ள பஹண்டேய் கிராமத்தில், 3 வயது ஆண் யானை ஒன்று செப்டம்பர் 1-ஆம் தேதி பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பல அடி ஆழம் உள்ள கிணற்றில் இருந்த யானையின் உடலில் மீட்பு படை வீரர்கள், கயிறு ஒன்றை கட்டினர்.

இதைத்தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு குழுவினர் ஒன்றிணைந்து செயல்பட்டு, யானைக்குட்டியை கிணற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

கிணற்றிலிருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக்கு, கால்நடை மருத்துவப் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர்.

இதையடுத்து கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அந்த யானைக்குட்டி, யானை மீட்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேன்கானல் வன அதிகாரி

இந்த நடவடிக்கை குறித்து தேன்கனால் கோட்ட வன அதிகாரி ஒருவர் கூறுகையில், வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்களின் விரைவான செயலாலும் ஒருங்கிணைந்த நடவடிக்கையாலும், இந்த மீட்பு பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் மீட்கப்பட்ட யானைக்குட்டி மேல் சிகிச்சைக்காக, யானைகள் மீட்பு மையத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு வன ஊழியர்களின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வனவிலங்கின் பாதுகாப்பிற்காக உடனடியாகச் செயல்பட்டு, ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முழு மீட்புக் குழுவினருக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று வனத்துறை அதிகாரி கூறினார்.

கோரிக்கை

இந்த மீட்பு நடவடிக்கை இணையத்தில் பரவி வைரலானதை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு பயனர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற பள்ளங்கள் மற்றும் பாழடைந்த கிணற்றை சுற்றி தடுப்புகளை அமைத்தோ அல்லது அதை முழுவதுமாக மண்ணால் நிரப்பியோ, அசம்பாவித சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.