இந்தியா

“பாஜகவின் விரக்திக்கு இதுவே சாட்சி”: மம்தா கார் மீதான தாக்குதலுக்கு கெஜ்ரிவால் கண்டனம்!

மோடி அரசின் செல்வாக்கு சரிந்து வருவதால், பாஜகவின் பதற்றமும், விரக்தியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை விமர்சித்துள்ள அவர், மம்தா பானர்ஜியுடன் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மம்தா கார்மீது தாக்குதல்

போலீஸ் காவலில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹல்சிஹாஹர் எனும் கிராமத்திற்கு சென்றுள்ளார் மம்தா பானர்ஜி. அப்போது வழியில் திரண்டிருந்த கும்பல், அவரது வாகனத்தின் மீது கற்கள், தண்ணீர்ப் பாட்டில்கள் மற்றும் காலணிகளை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக, காரின் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பாஜக இத்தகைய வன்முறைகளையும், தாக்குதல்களையும் ஏவி விடுவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,

இந்தச் சம்பவம் முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. மம்தா அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். அவரது காரைத் தாக்கும் இந்த குண்டர்களின் துணிச்சலைப் பாருங்கள். நாங்கள் உங்களுடன் உறுதியாக நிற்கிறோம்.

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் ஆளும் பாஜக திட்டமிட்டே சட்டம்-ஒழுங்கு நிலையைச் சீர்குலைத்துள்ளது. மோடி அரசின் செல்வாக்கு சரிந்து வருவதால், பாஜகவின் பதற்றமும், விரக்தியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.