பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பசில்கா-பெரோஸ்பூர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஞ்சாபின் ஜலாலாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 32 பேர், அண்மையில் மறைந்த தங்களது குடும்பப் உறுப்பினரான பூரோ பாய் (62) என்பவரின் அஸ்தியைக் கரைப்பதற்காக, அமிர்தசரஸில் உள்ள பியாஸ் நதிக்கு செல்ல அதிகாலை 3:30 மணியளவில் ஒரு ஜீப்பில் வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். காலை சுமார் 5:30 மணியளவில், பெரோஸ்பூர் நெடுஞ்சாலையில் உள்ள 'ஜங்கா வாலா மூர்' என்ற வளைவு அருகே சென்றபோது, எதிரே வந்த கனரக லாரி மீது இவர்களது பிக்கப் வாகனம் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், ஜீப் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவ இடத்திலேயே 13 வயது சிறுமி உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் போலீசார், அவசரகால மருத்துவக் குழுக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, பெரோஸ்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரித்கோட்டில் உள்ள குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப்ட்டு வருகிறது. இதில், பலர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பஞ்சாபில் சாலை பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. மேலும், விபத்து நடந்த 'ஜங்கா வாலா மூர்' பகுதி ஒரு ஆபத்தான கொண்டை ஊசி வளைவு போன்றது என்றும், அங்கு ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.