புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதேசமயம் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் போன்ற அடிப்படை நெறிமுறைகளை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். இதனால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்தனர். அத்துடன், தற்போது ஒமைக்ரான் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம் கொரோனா 3வது அலை சாத்தியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா வைரசின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கு மத்திய அரசால் அமைக்கப்பட்ட சூப்பர் மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர் இதுபற்றி கூறுகையில், ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா 3வது அலை ஏற்படக் கூடும் என்றார்.
அதேசமயம், தற்போது நோயெதிர்ப்பு சக்தி அதிக அளவில் மக்களிடம் உள்ளதால், 2வது அலையை விட இந்த அலை லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
தற்போது நாள் ஒன்றுக்கு 7,500 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. டெல்டாவுக்கு பதிலாக ஒமைக்ரான் அந்த இடத்திற்கு வரும்போது, இந்த எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். அதேசமயம், இரண்டாவது அலையை விட அதிகமான தினசரி பாதிப்புகள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்கிறார் வித்யாசாகர்.