இந்தியா

‘தொகுதி மறுவரையறைக்கும், மகளிர் இட ஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ - ராகுல் காந்தி

தொகுதி மறுவரையறை மற்றும் முறைகேடான தொகுதிப் பிரிப்பு மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாஜகவின் ஒரு முயற்சிதான் இது.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் குறித்து தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மசோதாவை எதிர்த்து நாளை மாநிலம் முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இந்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மசோதாவிற்கும், பெண்களின் இட ஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ளப் பதிவில்,

காங்கிரஸ் கட்சி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறது. நாடாளுமன்றம் 2023-இல் ஒருமனதாக நிறைவேற்றிய இந்த மசோதா, இப்போது நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது.

ஆனால் அரசு இப்போது கொண்டு வரும் முன்மொழிவுக்கும் (தொகுதி மறுவரையறை மசோதா), பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது தொகுதி மறுவரையறை மற்றும் முறைகேடான தொகுதிப் பிரிப்பு மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சி மட்டுமே.

சாதி கணக்கெடுப்புத் தரவுகளைப் புறக்கணித்து, இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களிடமிருந்து 'பங்கு திருடப்படுவது' எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ளப்படாது.

தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு மற்றும் சிறிய மாநிலங்களுக்கு எந்த விலையிலும் அநீதி இழைக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.