“ஜானி ஜானி எஸ் பாப்பா” போன்ற ஆங்கிலப் பாடல்கள் குழந்தைகளுக்குப் பொய் சொல்லக் கற்றுக்கொடுப்பதாக உத்தரப் பிரதேச உயர்கல்வித் துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா தெரிவித்துள்ளார்.
கான்பூரில் நடைபெற்ற ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா ஒன்றில் பேசிய அவர், இப்பாடலில் வரும் "சர்க்கரை சாப்பிட்டாயா? இல்லை பாப்பா" (Eating sugar? No papa) என்ற வரிகள், குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்வதை இயல்பான ஒன்றாக மாற்றுவதாக வாதிட்டார்.
மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய ரைம்ஸ்கள் இந்தியப் பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கவில்லை என்றும், அவை குழந்தைகளுக்குத் தேவையான ஒழுக்கத்தையோ கலாச்சாரத்தையோ, வழங்குவதில்லை என்றும் கூறினார்.
இதற்கு மாறாக முந்தைய தலைமுறையினர் கற்ற இந்திக் கவிதைகள் வாழ்க்கைக்கான சிறந்த படிப்பினைகளைக் கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.