இந்தியா

மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்.. கொல்கத்தாவில் கட்டிடங்கள் இடிப்பு - மாநிலம் முழுவதும் புல்டோசர் வரும் என எச்சரிக்கை

மக்கள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்கத்தா உயர்நீதிமன்றம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்தது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 207 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைந்தது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் மம்தா தலைமையான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது.

பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி கடந்த மே 9 அன்று மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். பதவியேயற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை சுவேந்து மேற்கொண்டு வருகிறார்.

அவரது செயல்பாடுகள் உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகளுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் பகுதிகளை மேற்கொள்ளப்படும் புல்டோசர் நடவடிக்கை.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற குற்றச்சாட்டில் பேரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக புல்டோசர் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்படுவது உ.பி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம் நடந்து வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் மாநில அரசுகளை கடுமையாக கண்டித்தன.

இந்நிலையில் மேற்கு வங்கத்திலும் புல்டோசர் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக நேற்று இரவு, கொல்கத்தாவில் அமைந்துள்ள பரபரப்பான ஹவுரா ரெயில் நிலையத்திற்கு அருகில் அதிகாரிகள் பெரிய அளவிலான புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டனர். சட்டவிரோத ஆக்கிரமிப்பு என குற்றம்சாட்டி அங்குள்ள வியாபாரிகளின் கடைகள் உள்ளிட்டவற்றை இரவோடு இரவாக புல்டோசர் கொண்டு இடித்து அகற்றினர்.

மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் படை மற்றும் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்த நடவடிக்கை குறித்து பாஜக தலைவரும் சுவேந்து அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சருமான திலீப் கோஷ் கோரக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது, " மாநிலம் முழுவதும் புல்டோசர் நடவடிக்கைகள் நடைபெறும். சட்டவிரோத கட்டுமானம் அல்லது ஆக்கிரமிப்பு எங்கு நடந்தாலும், அங்கு புல்டோசர்கள் பயன்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும். அப்படி வெளியேறினால், அவர்களுக்கோ நமக்கோ எந்தச் சிரமமும் ஏற்படாது. எந்தச் சூழ்நிலையிலும் அரசு நில ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்படாது," என்று கூறினார்.

முன்னதாக மே 12 அன்று தில்ஜலா-டாப்ஸியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சட்டவிரோத ஆக்கிரமிப்பு என கூறி தோல் தொழிற்சாலை இயங்கி வந்த கட்டிடத்தை கொல்கத்தா மாநகராட்சி இடித்தது அகற்றியது.

அருகில் இருந்த வீடுகள் உள்ளிட்டவையும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என கூறி அதிகாரிகள் இடிக்க முற்பட்டனர்.

இதனால் மக்கள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தலையிட்ட கல்கத்தா உயர்நீதிமன்றம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தது. தில்ஜலா-டாப்ஸியா, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.