மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் 7 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தங்கம் வாங்குதலை தவிர்த்தல், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்தல் போன்றவை இதில் அடங்கும்.
பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,
“1950 முதல் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர்கள், பொருளாதார நெருக்கடி என பல சிக்கல்களை நாடு சந்தித்துள்ளது. லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி போன்ற தலைவர்களும் தங்கம் வாங்க வேண்டாம் என கூறியுள்ளனர். ஆனால் எந்தவொரு அரசும் குடிமக்களிடம் இதுபோன்ற விரிவான 'ஏழு வேண்டுகோள்களை' முன்வைக்கவில்லை. நாடே அதிர்ச்சியில் உள்ளது.
பிரதமரிடம் எனக்கு மூன்று கோரிக்கைகள் உள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை என்ன? எதிர்கால கணிப்புகள் என்ன என்பதை பிரதமர் விளக்கவேண்டும். இன்று சந்தையில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன, இது பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கைக்கு உகந்தது அல்ல.
தற்போதைய சூழலுக்கு மத்தியக் கிழக்கில் நடைபெறும் போர்தான் காரணமென அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்தவொரு நாட்டின் அரசும் தனது குடிமக்களுக்கு இதுபோன்ற வேண்டுகோள்களை விடுக்கவில்லை. மற்ற அரசாங்கங்கள் இதுபோல் வேண்டுகோள் விடுக்காதநிலையில், இதில் வேறு ஏதேனும் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது.
நடுத்தர மக்கள்மீது மட்டும் ஏன் இவ்வளவு சுமைகள்? தியாகமானது அரசிடமிருந்துதானே முதலில் வந்திருக்கவேண்டும்.” என தெரிவித்தார்.