இந்தியா

உடையில்தான் கலாச்சாரம் இருக்கிறதா? - கிருத்தி சனோனுக்கு ஆதரவாக களம் இறங்கிய ராகுல் காந்தி!

பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?

இந்தியா வளர்ச்சி குறித்து பேசும் முக்கிய நாடுகளில் ஒன்று. ஆனால் உண்மையான வளர்ச்சி எதில் என்ற புரிதல் இல்லாததே இங்கு பெரும் சிக்கலாக உள்ளது.

அந்தவகையில் தற்போது ஒரு கலாச்சாரம் எதில் உள்ளது என்ற அடிப்படை புரிதல் இல்லாமல், வெறும் ஒரு விளம்பரம் பெரும் பேசுபொருளாக உள்ளது.

நடிகை கிருத்தி சனோன் ரக்ஷா பந்தன் பண்டிகையை மையப்படுத்திய ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடிகை கீர்த்தி சனோன் அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கும், ட்ரோல்களுக்கும் உள்ளானது.

பாரம்பரியமிக்க ஒரு பண்டிகைக்கு அவர் அணிந்திருந்த ஆடை தகுதியற்றது என்றும், கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும் கூறி சிலர் அவரை இணையத்தில் கடுமையாக விமர்சித்தனர். இதில் நடிகை கங்கனா ரனாவத்தும் அடங்குவார்.

இதனைத்தொடர்ந்து அனைத்து விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்.,

"பண்டிகையின் சாரம்சம் என்பது நாம் உடுத்தும் உடையில் இல்லை. அந்த பாரம்பரியத்துக்கு நாம் அளிக்கும் அர்த்தம் மற்றும் உணர்வுகளில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.

ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பைப் பற்றிய ஒரு பிணைப்பு. நானும், என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒரு சகோதரன் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு போலவே எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.

பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையைக் கணிப்பது சரியல்ல. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?

காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகளின் பாணியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இன்றும் கலாச்சாரத்தின் மீதான மரியாதை என்பது பெண்ணின் ஆடையை வைத்தே அளவிடப்படுகிறது.

பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் தான் இருக்கிறதே தவிர, அவளுடைய ஆடையின் நெக்லைனில் அல்ல" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை கிருத்தி சனோனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கிருத்தி சனோனின் சமூக வலைதளப் பதிவை பகிர்ந்து இதுகுறித்து பேசியுள்ள ராகுல் காந்தி,

“ஒரு பெண் என்ன அணியவேண்டும், என்ன செய்யவேண்டும், எங்கு செல்லவேண்டும் என்பது அவளுடைய விருப்பம்.

அவர்கள் (பெண்கள்) அவர்களுடைய சுதந்திரத்தை பயன்படுத்துவதை கேலி செய்வதை, கேள்வி கேட்பதை நிறுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.