விமான கடத்தல் முயற்சியில் இருந்து பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற ப்ளை துபாய் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. அப்போது விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த அறையில் விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவசரகால சமிஞ்சைகள் இஸ்ரேல் நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்குவாக் 7700 (பொது அவசரநிலை) எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் விமானம் வழக்கத்திற்கு மாறாக சுமார் 15,000 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தபோது, ஸ்குவாக் 7500 (விமான கடத்தல்) என்ற எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேலிய வான்வெளியும் சிறிது நேரத்தில் மூடப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் யு டர்ன் செய்து சவுதி அரேபியா நோக்கி திரும்பியது.
பின்னர் இந்த விமானம், சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சவுதியில் தரையிறக்கப்பட்ட பயணிகளை இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, இஸ்ரேல் வேறு விமானத்தை அனுப்பியது.
இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற பயணிகள் விமானத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு விமானியும், ஓமன் நாட்டை சேர்ந்த ஒரு துணை விமானியும் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமான கடத்தல் சம்பவத்தில் ஓமன் நாட்டு துணை விமானியுடன், இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கிள்ளார். அப்போது அவர் பயணிகளின் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் விமானியுடன் போராடிய போது, இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து சவுதியில் விமானம் தரையிரங்கிய போது, ஊழியர்கள் இந்திய விமானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் இந்திய விமானி மச்சாரை பாராட்டினர். அவர்களை தொடர்ந்து பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் மச்சாரை பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. மிகக் கடுமையான ஆபத்தான சூழலிலும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் அளப்பரிய துணிச்சலையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தினார்.
அவரது வீரமிக்க செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், ஒரு பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியது. கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.
அவர் விரைவில் குணமடையவும், புத்துணர்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் திகழவும் பிரார்த்திக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.