இந்தியா

கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கு மேகதாது திட்டம் அதிக பயனளிக்கும் - முதலமைச்சர் டி.கே. சிவகுமார்

மேகதாது தொடர்பாக முதலமைச்சர் விஜய் உடன் பேசத்தயார் என முதலமைச்சர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

தவெக அரசு தலைமையிலான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் மாநில அரசின் பல்வேறு பிரச்சனைகள் குறித்துப் பேசினார். அந்தவரிசையில் கர்நாடக அரசின் மேகதாது திட்டம் குறித்தும் பேசியிருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர்,

“மேகதாது என் மனதிற்கு நெருக்கமானது மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் இதயம். மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கு அதிகம் பயனளிக்கும் ஒரு திட்டமாகும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 177 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.

எந்த விலை கொடுத்தாவது அவர்களுக்கு 177 டிஎம்சி தண்ணீரை விடுவிப்பது எங்களது கடமை. கடந்த ஆண்டு, 400 டிஎம்சிக்கும் அதிகமான தண்ணீர் கடலில் கலந்தது. அதற்கு யார் பொறுப்பு?

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருடன் பேச நான் தயாராக இருக்கிறேன். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி, கர்நாடகாவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் இந்தியர்கள்.

நாம் அனைவரும் ஒரே நதியையும் ஒரே நீரையும் சார்ந்து வாழ்கிறோம். விவசாயம், குடிநீர், கால்நடைகள், பறவைகள், தொழிற்சாலைகள் என அனைவருக்கும் காவிரி நீர் தேவைப்படுகிறது.

அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தப் பிரச்சினையில் ஒன்றுபடுகின்றன. அவர்களது வாதங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுவிட்டன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்ட நிலையில், இதற்கு மேல் என்ன செய்துவிட முடியும்? 177 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறும்போது, ​​நாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையா? நாம் அதை ஏற்றுக்கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.