தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே இருக்கும் தண்ணீர் பிரச்னைக்கு மேகதாது திட்டம்தான் ஒரே நிரந்தர தீர்வு என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் பேசிய அவர்.,
“எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் அரசின் நிலைப்பாடாகும்.
எங்கள் அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே தங்கள் பொறுப்பிலுள்ள மாவட்டங்களுக்குச் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அடுத்தடுத்த நாட்களை தொடர்ந்து விவசாயிகளை சந்தித்துப் பேசி கிராமங்களில் உள்ள யதார்த்த நிலைகுறித்து அறிக்கை சமர்பிப்பார்கள்.
அதன் பிறகு, வருவாய்த்துறை அமைச்சர் தொழில்நுட்ப அம்சங்கள், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் இந்திய அரசின் விதிமுறைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு நிலைமையை மதிப்பீடு செய்வார். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், அரசு தனது முடிவுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் அறிவிக்கும்.
பிரச்னைகளுக்கு மேகதாது திட்டம்தான் ஒரு நிரந்தரத் தீர்வு. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கிவிட்டது, மத்திய அரசும் தனது பதிலை அளித்துள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாம் இனியும் நேரத்தை வீணாக்காமல் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இது தமிழ்நாட்டிற்கு அதிகம் கிடைப்பதோ அல்லது கர்நாடகாவிற்கு குறைவாகக் கிடைப்பதை பற்றியது அல்ல. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சுமூகமான முறையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இம்முயற்சியில் அனைவரின் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.