இந்தியா

‘தெற்கை ஆள்வதும், ஓபிசி பிரதிநிதித்துவத்தை அழிப்பதுமே இலக்கு’ - தொகுதி மறுவரையறை குறித்து அசாதுதீன் ஓவைசி பேச்சு

தொகுதி மறுவரையறை மசோதா மகளிர் இட ஒதுக்கீடு பற்றியது அல்ல என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா, தென்னிந்திய மாநிலங்களைக் குறிவைப்பதாக ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துளார்.

இன்று மக்களவையில் மசோதா தொடர்பாக உரையாற்றிய அவர்,

“இந்த மசோதா மகளிர் இட ஒதுக்கீடு பற்றியது அல்ல. தெற்கை ஆள்வதும், சட்டமன்றத்தில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாக அழிப்பதுமே இதன் முக்கிய நோக்கம்” என தெரிவித்தார்.

மேலும், “கூட்டாட்சி என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். தொகுதி மறுவரையறை மீதான தடையை நீக்குவது, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக இடங்களையும் அதிகாரத்தையும் அளித்து, சிறிய மாநிலங்களின் நியாயமான குரலை நசுக்குகிறது.

ஒரு மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு அமைச்சர் ஏழு நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வழங்க வேண்டும். அதன் பிரதிகள் குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை ஒரு அப்பட்டமான விதிமீறல். ஊழல் நடைமுறை.” என தெரிவித்தார்.