இந்தியா

மூட்டையிலிருந்து வெளிவந்த முதியவர்... அதிர்ச்சியில் உறைந்த கொரியர் ஊழியர்கள்... விசாரணையில் வெளிவந்த வினோதம்

பெங்களூருவில் ரீல்ஸ் மோகத்தால் பெண்ணே, தந்தையை மூட்டைக்கட்டி கொரியரில் அனுப்பிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாலை மலர்

இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் ரீல்ஸ் மோகம் எல்லையைத் தாண்டுகிறது என்று சொன்னால் ஆச்சர்யப்பட தேவையில்லை.

சமூக வலைதள வீடியோக்கள் பல பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளன என்பது ஒப்புதலுக்குரியதே. அதற்காக இப்படியா? என்னும் அளவிற்கு பல வீடியோக்கள் இப்போது வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

பார்வைக்காகவும், ஃபாலோவர்ஸ்களுக்காவும் பலரும் தேவையில்லாத ஒன்றை மெனக்கெட்டு செய்து வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது பெங்களூருவில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் மற்றும் உகாதி பண்டிகையையொட்டி பெங்களூருவில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் டிக்கெட்டுகள் கிடைப்பதும் கடினமாக இருந்துள்ளது.

இந்தப் பேருந்து கட்டண உயர்வை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு மற்றும் நையாண்டியாக ரீல்ஸ் வீடியோ எடுக்க ஒரு பெண் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக தனது வயதான தந்தையை அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் சாக்கு மூட்டையில் கட்டி கொரியர் அலுவலகத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். பெங்களூருவின் வியாலிகாவல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கொரியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மூட்டைக்குள் ஏதோ அசைவதை கண்ட ஊழியர்கள் சந்தேகமடைந்து அதனைத் திறந்து பார்த்தபோது, உள்ளே அந்தப் பெண்ணின் தந்தை மூச்சுவிட திணறிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஊழியர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப, தாங்கள் வெகுதூரத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்திருப்பதாகவும், கூடுதல் பணம் தருகிறோம் என்றும் கூறி அந்த "பார்சலை" ஏற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து கொரியர் அலுவலக ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், ரீல்ஸ் எடுப்பதற்காகவே இப்படி செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்து அவர்களை அனுப்பியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.