மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப் பணக்கார எம்எல்ஏக்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா ஒரு நாள் முழுவதும் மும்பை வீதிகளில் பிச்சைக்காரராக வாழ்ந்துள்ளார்.
பராக் ஷா, மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். 2024 மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலின் போது ரூ.3,383 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பை வேட்புமனுவில் தாக்கல் செய்து, மாநிலத்தின் மிகப்பணக்கார வேட்பாளராக பராக் ஷா அறியப்பட்டார்.
பராக் ஷா குஜராத்தி ஜைன மதத்தவர் ஆவார்.
ஜைன மதப் புனித மாதத்தையொட்டி , தனது ஆன்மீகக் குருவான நம்ரமுனி என்பவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே பராக் ஷா பிச்சைக் கோளம் பூண முடிவு செய்தார்.
நேற்று (செப்டம்பர் 14) தனது பாதுகாவலர்கள், உதவியாளர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக அழுக்காக மேக்கப் போட்டு பிச்சைக்காரர் வேடமிட்டு மும்பை தெருக்களில் சுற்றியுள்ளார்.
இதுகுறித்து பின்னர் பேசிய பராக் ஷா, "நமக்குக் கிடைக்கும் அனைத்து மரியாதைகளும் நம் பதவி மற்றும் அந்தஸ்துக்காக மட்டுமே கிடைக்கிறது.
பிச்சைக்காரர் வேடத்தில் சென்றபோது, வழக்கமாக என்னைச் சந்திக்க வரிசையில் நிற்கும் அதே மனிதர்கள் என்னை விட உயர்ந்தவர்களாக உணர்ந்தனர். இதுவே வாழ்க்கையின் கசப்பான உண்மை." என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிச்சைக்காரராக இருந்தபோது மும்பை மக்கள் தனக்குச் செய்த உதவிகளைப் பராக் ஷா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார.
ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார். ஒரு ஏழை சமோசா வியாபாரி, அவரிடம் பணம் இல்லை என்று கூறியபோதும், சிறு சலிப்பும் இன்றி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.
"மும்பை நகரம் என்பது மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கும் ஒரு நகரம் என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது" என பராக் ஷா உணர்ச்சிபொங்க தெரிவித்தார்.
பிச்சை எடுத்து சாப்பிட்டு முடித்த பிறகு, தனது மேக்கப்பை நீக்கிவிட்டு தான் சென்ற அதே இடங்களுக்கு மீண்டும் சென்று மக்களிடம் உரையாடியுள்ளார்.
இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.