இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே தான் போட்டி.. மம்தா மீது ஒரு வழக்கு கூட போடாதது ஏன்? - ராகுல்

இவ்வளவு ஊழல் புகார்கள் இருந்தும், மம்தா மீது ஏன் 36, 38 அல்லது 40 வழக்குகள் போடப்படவில்லை.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29 ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் அங்கு தலைவர்களின் தீவிர பிரசாரம் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று (மார்ச் 25) மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தின் ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் கூறுவதாவது, "மோடி என் மீது பல வழக்குகளைப் போட்டுள்ளார், ஆனால் மம்தா பானர்ஜி மீது ஒரு வழக்குகூட இல்லை.

என் வீட்டைப் பறித்தார்கள்; என் எம்பி பதவியைப் பறித்தார்கள்; என் மீது 36 வழக்குகள் உள்ளன. அமலாக்கத் துறை என்னை 55 மணிநேரம் விசாரணை செய்தது. மம்தா பானர்ஜியை எத்தனை மணிநேரம் விசாரித்தார்கள்?

சாரதா சிட் ஃபண்ட் ஊழல் 17 லட்சம் முதலீட்டாளர்களை அழித்தது. ரோஸ் வேலி ஊழலில் பல லட்சம் பேர் பணத்தை இழந்தனர். இவ்வளவு ஊழல் புகார்கள் இருந்தும், மம்தா மீது ஏன் 36, 38 அல்லது 40 வழக்குகள் போடப்படவில்லை.

ஏனென்றால், அவர் பாஜவை நேரடியாக எதிர்த்துப் போரிடுவதில்லை. வங்காளத் தேர்தல் முடியட்டும், அதன் பிறகு நரேந்திர மோடி மம்தா பானர்ஜிக்கு எதிராக ஒரு வார்த்தைகூடப் பேசமாட்டார்.

அவர் மக்கள் நலனில் அக்கறை காட்டியிருந்தால் பாஜக இங்கே காலூன்றி இருக்க முடியாது.

மம்தா பானர்ஜி வங்காளத்தில் பாஜக நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டி. இடதுசாரி ஆட்சிக்கு முன்பு, காங்கிரஸ் காலத்தில் மேற்கு வங்கம் தொழில்துறையின் மையமாக இருந்தது. ஆனால், இடதுசாரிகளும் இப்போது மம்தாவும் அதைச் சீரழித்துவிட்டனர்

2021ல் மம்தா வாக்குறுதி அளித்த 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என்னவானது? வங்காளத்தில் வேலை கிடைக்க வேண்டுமென்றால் திரிணாமுல் காங்கிரஸில் உறவினர்கள் இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது" என்று தெரிவித்தார்.