இந்தியா

காங்கிரஸ் பொதுத்துறை வங்கிகளை உருவாக்கியது.. மோடி அரசு அதை விற்கிறது - ஐ.டி.பி.ஐ 60.72% பங்குகள் விற்பனைக்கு ராகுல் எதிர்ப்பு

நாடாளுமன்றத்திற்கு அளித்த வாக்குறுதியை மீறுவது மக்களுக்குச் செய்யும் துரோகம்.

காங்கிரஸ் வங்கிகளை உருவாக்கியது, பாஜக அவற்றை விற்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நவம்பர் 1 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆர் மோசடிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் நடத்தப்படவுள்ள பிரமாண்ட பேரணிக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

ஐடிபிஐ விற்பனை

இதனிடையே ஐடிபிஐ வங்கியின் 60.72% பங்குகளை கனடாவின் ஃபேர் ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு வந்துள்ளது.

இந்த முடிவுக்கு எதிராக எதிராகப் போராடி வரும் வங்கி ஊழியர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வண்ணம் ராகுல் காந்தி திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "பொதுத்துறை வங்கிகள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டன, ஆனால் மோடியின் ஆட்சியில் அவை அனைத்தும் விற்கப்படுகின்றன.

பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்யப்பட வேண்டிய சொத்துக்கள் அல்ல. அவை மக்களின் பணத்தைப் பயன்படுத்தி நாட்டிற்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்.

கடின உழைப்பு

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டத்தில் இருந்த அந்த வங்கி, அதன் ஊழியர்களின் கடின உழைப்பின் காரணமாக, கடந்த ஆண்டு ரூ.9,000 கோடிக்கும் அதிகமான லாபத்தை ஈட்டிய ஒரு நிறுவனமாக உருமாறியுள்ளது.

தற்போது மத்திய அரசு மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் இணைந்து 95 சதவீதம் வசம் வைத்திருக்கும் வங்கியின் உரிமையானது, பங்குகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் வெறும் 34 சதவீதமாக வீழ்ச்சியடையும்.

துரோகம்

2003ஆம் ஆண்டில், வங்கியில் குறைந்தபட்சம் 50 சதவீதப் பங்குகளை அரசு தக்கவைத்து கொள்ளும் என்று அப்போதைய அரசு நாடாளுமன்றத்திற்கு உறுதியளித்திருந்தது.

நாடாளுமன்றத்திற்கு அளித்த வாக்குறுதியை மீறுவது மக்களுக்குச் செய்யும் துரோகம்.

இட ஒதுக்கீடு

வங்கியின் தனியார்மயமாக்கலால், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அரசியலமைப்பு ரீதியான இட ஒதுக்கீட்டுப் பலன்கள் முற்றிலுமாக நீக்கப்படும்.

மேலும், ஊழியர்களின் பணிப் பாதுகாப்பும், முதலீட்டாளர்களின் நலன்களும் ஆபத்தில் சிக்கும்" என எச்சரித்துள்ளார்.

வங்கியின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிரான ஊழியர்களின் நியாயமான போராட்டத்திற்கு காங்கிரஸ் உறுதுணையாக நிற்கும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ரூ. 53,000 கோடி ஒப்பந்தம்

கடந்த அக்டோபர் 14 அன்று, கோடீஸ்வரர் பிரேம் வல்சா தலைமையிலான கனடிய நிறுவனமான ஃபேர் ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸுக்கு, ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ. 53,000 கோடி ஆகும். ஃபேர் ஃபாக்ஸ் நிறுவனம், அரசின் 30.48 சதவீத பங்குகளையும் (ரூ.26,620 கோடி) எல்ஐசியின் 30.24 சதவீத பங்குகளையும் (ரூ.26,440 கோடி) வாங்குகிறது.

அந்நிறுவனம் ஒரு பங்கின் விலையை ரூ. 81 என நிர்ணயித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இந்த நிதியாண்டிற்குள் இந்த பரிவர்த்தனையை முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முறைகேடு

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பீடு மற்றும் நடைமுறைகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக வங்கி தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) ஒரு விளக்கத்தை வெளியிட்டது.

ஒதுக்கீட்டு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், சுதந்திரமான முகமைகளால் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலையான ரூ.75.99-ஐ விட அதிகமான விலையான ரூ.81-க்கு ஃபேர் ஃபாக்ஸ் இந்த ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தது என்றும் DIPAM விளக்கம் அளித்தது.

SCROLL FOR NEXT