இந்தியாவில் ஒரு கட்சியை புதிதாக தொடங்குவதற்கு சட்டங்கள் இருக்கின்றன. அதனை பின்பற்றிதான் ஒரு கட்சியை உருவாக்க முடியும். அந்த வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29ஏ-ன் கீழ் இதற்கான நடைமுறைகள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளையும் பின்பற்ற வேண்டும்.
அப்படி அனைத்து நடைமுறைகளையும் செய்து முடித்து ஒரு கட்சியை உருவாக்கி, அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கான கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் தத்துவங்கள் என பல்வேறு விஷயங்களை விதைக்க வேண்டும். அதனை மக்கள் ஏற்க வேண்டும். இப்படி, ஒரு கட்சியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த பல ஆண்டுகள் எடுக்கும்.
ஆனால் அப்படி எந்த ஒரு முயற்சியும் இல்லாமல், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து இணையத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் மூளை முடுக்கிலும் நையாண்டி அரசியலை முன்னிலைப்படுத்தி டிரெண்ட் ஆகிய 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (சி.ஜே.பி.) என்ற ஒரு சமூக வலைதளப் பக்கத்தை பற்றிய பேச்சுதான் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கிறது.
யார் இந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், கடந்த மே மாதம் 15-ந்தேதி வேலையில்லாத இளைஞர்களை ஒட்டுண்ணிகள், கரப்பான்பூச்சி என விமர்சித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு குரலாக உருவானதுதான் இந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
ஆனால் நீதிபதி சூர்யகாந்த் இதற்கு மறுப்பு தெரிவித்து தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்தார். மேலும், வேலையில்லாத இளைஞர்களைத் தாம் விமர்சித்ததாகக் கூறும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், இந்திய இளைஞர்கள் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை நையாண்டியாக பதிவு செய்யும் நோக்கில், அபிஜீத் திப்கே என்பவரால் கடந்த 16-ந்தேதி இந்த 'சி.ஜே.பி.' இணையப் பக்கம் தொடங்கப்பட்டது. இவர் ஆம் ஆத்மி கட்சியின் ஊடக உத்தி வகுப்பாளராக முன்னர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தேர்தல் ஆணையத்தால் பதிவுசெய்யப்பட்ட நிஜமான அரசியல் கட்சி அல்ல. முழுக்க, முழுக்க சமூக ஊடகங்களில் நெட்டிசன்களால் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி இயக்கமாக 'டிரெண்ட்' ஆகி வருகிறது.
வரவேற்பு
சமூக வலைதள பக்கங்களான எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் இந்த பெயரில் உருவாக்கப்பட்ட பக்கத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் எக்ஸ் தளப்பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' பக்கத்தை குறுகிய காலத்தில் அதிகம் பேர் பின்பற்றியதும் அதிகளவில் பேசப்பட்டது.
சட்டப்பூர்வ கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த கணக்கு பக்கம் முடக்கப்பட்டாலும், தற்போது மற்றொரு கணக்கு தொடங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இன்ஸ்டாகிராமில் 2 கோடிக்கும் அதிகமாக பின்தொடர்பவர்களை கொண்டதாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' பக்கம் உள்ளது. இது தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா கணக்கு பக்கங்களை பின்தொடர்பவர்களை காட்டிலும் அதிகம் என சொல்லப்படுகிறது.
எதனால் இது பிரபலம் ஆனது? என பலருக்கும் தோன்றலாம். 'ஜென்-சி' என்று கூறப்படும் இளந்தலைமுறைகள் இணையத்தில் கைத்தேறியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வத்தை இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சமூக வலைதளப் பக்கங்கள் ஈர்த்துவிட்டதே முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது.
அப்படி என்ன விஷயங்களை அவர்கள் பகிர்கிறார்கள்? என்றால், நையாண்டி மற்றும் கிண்டல் கலந்த அரசியல் விமர்சனங்கள் இந்த பக்கங்களில் பெரும்பாலும் பகிரப்படுகின்றன. அதே நேரம் இன்றைய இளைஞர்களின் ஆதங்க குரலாகவும் சில பதிவுகள் அதில் வருகின்றன.
குறிப்பாக சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஆதரவுக் குரலை ஒலித்தும், மத்திய கல்வி அமைச்சகத்தை கிண்டல் செய்தும் தொடர்ச்சியான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் பகிரும் அத்தனை மீம்ஸ்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மனித உருவ கரப்பான்பூச்சி இடம்பெறுகிறது.
சர்வதேச ஊடகங்களிலும் செய்தி...
வெறும் இணையத்தோடு மட்டும் இவர்களின் இந்த பிரதிபலிப்பு நின்றுவிடவில்லை. களத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் மாசடைந்த யமுனா நதியை இளைஞர்கள் கரப்பான் பூச்சி வடிவத் தொப்பிகளை அணிந்தபடி தூய்மைப்படுத்தும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. மேலும் சில இடங்களில் மக்களுக்கான உரிமைகளுக்கான அமைதியான போராட்டங்களையும் இதனை சார்ந்த தன்னார்வலர்கள் முன்னெடுக்கிறார்கள்.
'ராய்ட்டர்ஸ்', 'அல் ஜசீரா', 'ஃபோர்ப்ஸ்' போன்ற சர்வதேச ஊடகங்கள் வரை இந்த 'கரப்பான்பூச்சி புரட்சி' செய்தியாக மாறியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பலமான இளைஞர் சக்தி, தங்களின் கோபத்தை வெளிப்படுத்த "ஹைப்பர்-அயர்னிக்" என்று கூறப்படும் இதுபோன்ற மீம்ஸ் கலாசாரத்தைக் கையில் எடுத்திருப்பதை உலகிற்கு இந்த இயக்கம் உணர்த்தி இருக்கிறது.
டிஜிட்டல் போர்
இந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. கேலிப் பேச்சாகவும் பார்த்து இருந்துவிட முடியாது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் தங்களின் ஜனநாயக எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்க நடத்தும் டிஜிட்டல் போராகவே இதனை பார்க்க முடிவதாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிடுகின்றனர்.
தேசிய மற்றும் மாநில கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும், முக்கிய வி.ஐ.பி.க்கள் மறைமுகமாவும், வெளிப்படையாகவும் இதற்கு ஆதரவுக்கரம் நீட்டினாலும், இதற்கு சில எதிர்ப்பு குரலும் பதிவாகத்தான் செய்கின்றன. எது எப்படி இருந்தாலும், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும், விவாதத்தையும் ஏற்படுத்த "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போன்ற இணையதள நையாண்டி இயக்கம் ஒரு வடிகாலாக மாறி இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இடைத்தேர்தலில் போட்டியா?
பீகார் மாநிலத்தின் பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த அதன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெறும் இணையதள நையாண்டியாகத் தொடங்கி, தற்போது பிரதான கட்சிகளான பா.ஜனதா மற்றும் பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்' ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கப் போவதாகக் கூறப்படுவது, அரசியலில் இளைஞர்களுக்கு எழுந்துள்ள ஆர்வமாகவும் பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இடையே பிரபலமான 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயருக்கான உரிமைகளை கோரி 3 தனித்தனி வர்த்தக முத்திரை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.