மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவினாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் அல்லது இயற்கை எரிவாயுவுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தற்போது கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மூலோபாய இருப்பு உட்பட சுமார் 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது. மொத்த சேமிப்பு 74 நாட்களுக்கு வரும்.
நாட்டின் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் 100% க்கும் அதிகமான திறனுடன் இயங்கி வருகின்றன.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அடுத்த 60 நாட்களுக்கு தேவையான விநியோகத்தை உறுதி செய்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் போதுமான இருப்பைக் கொண்டுள்ளன. எரிபொருள் வாங்குவதற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவினாலும், மாற்று மூலங்கள் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.
அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.