பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆம் ஆத்மி கடிதம் எழுதியுள்ளது. ராகவ் சதா, சந்தீப் பாடக், அசோக் மித்தல், சுவாதி மாலிவால், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா மற்றும் விக்ரம் ஷைனி ஆகிய 7 எம்பிக்களும் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தங்களிடம் இருப்பதால் தகுதி நீக்கம் செல்லாது என ராகவ் சதா தெரிவித்துள்ளார்.
அதாவது ஒரு கட்சியின் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைய முடிவு செய்தால், அவர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் மொத்தம் 10 எம்பிக்கள் உள்ளனர். அதில் 7 பேர் விலகியுள்ளதால், அவர்கள் இந்த "இணைப்பு" விதியைப் பயன்படுத்த உரிமை கோருகின்றனர்.
மறுபுறம் எந்தவொரு பிளவும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாது என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சில அரசியல் நிபுணர்கள், மூல அரசியல் கட்சி வேறொரு கட்சியுடன் இணைந்தால் மட்டுமே உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறுகின்றனர். இது தொடர்பான தகுதி நீக்க மனுக்கள் மீது மாநிலங்களவைத் தலைவர் தான் இறுதி முடிவெடுப்பார். அவரது முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.