டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்விற்கு எதிராக 37 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவடைந்ததை அடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று ஒரு வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில் அபிஜீத் தீப்கே கூறியிருப்பதாவது:-
உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. உடல்நலக் குறைபாடுகளை காரணம் காட்டி, ஜந்தர் மந்தரில் கூடியிருந்த ஆதரவாளர்களை நேரில் சந்திக்க இயலவில்லை, அதற்காக மன்னித்து கொள்ளுங்கள்.
நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஜந்தர் மந்தரில் காத்திருந்த அனைவரையும் என்னால் சந்திக்கவோ, அவர்களுக்கு நன்றி சொல்லவோ முடியவில்லை.
ஏனென்றால், உங்களுக்குத் தெரியும், எனக்கு டைபாய்டு காய்ச்சல் இருந்தது. எனது உடல் வெப்பநிலை 101 டிகிரியாக இருந்தது. அதனால்தான் நான் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது.
உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும். ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இந்த நாட்டிற்காக நீங்கள் செய்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் சல்யூட்.
எங்களைச் சந்தேகித்தும், விமர்சித்தும், உங்களுக்கு போராடத் தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பியவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் எங்களை விமர்சிக்காமலும், கேள்வி எழுப்பாமலும் இருந்திருந்தால், எங்களால் முன்னேறியிருக்க முடியாது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக நாங்கள் நீண்ட தூரம் பயணிப்போம். இது வெறும் தொடக்கம்தான். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ-யின் கணினி வழியில் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், காக்ரோச் ஜனதா கட்சியினர், ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த இயக்கம் நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களின் ஆதரவைப் பெற்றதுடன், பல எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெற்றது.
ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஜூலை 18 அன்று காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் காவல்துறையினருடன் மோதல்கள் ஏற்பட்டன.
அவர்கள் போராட்டக்காரர்களைக் கலைக்கத் தடியடியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தினர்.
அன்றைய தினம் பிற்பகலில், நட்டா தனது இல்லத்தில் சிஜேபி தலைவர்களுடன் முதல் முறையாக சந்திப்பு ஒன்றை நடத்தினார். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தை குறித்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து சிஜேபி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
இந்த நிலையில் நீட் பிரச்சினை தொடர்பாக ஜந்தர் மந்தரில் 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேற்று கைவிட்டது.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதாக சிஜேபி தெரிவித்தது.
அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடனும் புரிதலுடனும் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என அவர் கூறினார்.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய வரைவை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாகவும் செளரவ் தாஸ் தெரிவித்தார்.
இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நட்டா, போராட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும், தங்களின் எஞ்சிய கோரிக்கைகளையும் கோடிட்டு காட்டும் எழுத்துப்பூர்வ வரைவை சிஜேபி-யினர் சமர்ப்பித்ததாகக் கூறினார்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கட்சி உறுதிமொழி கோரியுள்ளதாகவும் நட்டா கூறினார்.