இந்தியா

திருப்பூரில் 6 பேரை நாசவேலைக்கு தயார்படுத்திய பயங்கரவாதி கைது- பரபரப்பு தகவல்கள்

திருப்பூரில் 6 பேரை நாசவேலைக்கு தயார்படுத்திய பயங்கரவாதியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி உள்ளனர். இந்த நடவடிக்கையில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பயங்கரவாத கும்பலை தேட தொடங்கினார்கள்.

அதற்கும் ஒரு காரணம் இருந்தது. டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ ரெயில் நிலைய பகுதியில் தேச விரோத வாசகங்களுடன் (காஷ்மீர் தொடர்பானது) கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாகவும் இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த சுவரொட்டி விவகாரத்தை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் கொல்கத்தாவை சேர்ந்த உமர் பாரூக். ரோபில் உல் இஸ்லாம் ஆகிய 2 பேருக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து டெல்லி போலீசார் கொல்கத்தா சென்று அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, டெல்லி செங்கோட்டை எதிரே உள்ள ஒரு இந்துக்கோவில் மற்றும் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள முக்கியமான இந்து கோவில்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதற்கு தங்களுக்கு வேலை தந்த நபர் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தனர். அவர் யாரென விசாரித்தபோது, கடந்த 2007-ம் ஆண்டு அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷபீர் அகமது லோன் என தெரியவந்தது. இவர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 2007-ல் கைதான இவர் 2019-ல் வெளியே வந்து வங்காள தேசத்துக்கு தப்பிச்சென்று விட்டார்.

அதன்பின்னர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இந்துக் கோவில்களை தாக்கும் நாசவேலைகளுக்கு ஆட்களை தயார் செய்து வந்தார்.

இதன் அடிப்படையில்தான் டெல்லியில் சுவரொட்டி ஒட்ட ஆட்களை அனுப்பி இருந்தார். திருப்பூருக்கும் ஒரு கும்பலை அனுப்பி வைத்தார். திருப்பூருக்கு அனுப்பப்பட்ட கும்பலைச் சேர்ந்த 6 பேர் பிப்ரவரி மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சமூக வலைத்தளங்களில் தேசத்துக்கு விரோதமான கருத்துகளை இவர்கள் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, போலீசார் கடந்த 40 நாட்களாக ஷபீர் அகமது லோனை தேடி வந்தனர். வங்காளதேச எல்லைகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் டெல்லிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட ஷபீர் அகமது லோனும் ஒரு "ஸ்லீப்பர் செல்" என்றே கூறப்படுகிறது. நாசவேலைகளை நடத்துவதற்காக உத்தரவுகளை பிறப்பிக்கும் நபர்கள் யாரென்றே தெரியாது என போலீசாரிடம் அவர் கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஷபீர் அகமது லோன் போல, ஷேக் சஜ்ஜாத் குல் என்பவரை பிடிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இவர் பஹல்காம் தாக்குதல் அமைப்போடு தொடர்பு உடையவர் என கூறப்படுகிறது.