இந்தியா

'பயங்கரவாதம் யாருக்கும் உத்தி சார்ந்த சொத்து அல்ல': பிக்பேக்கில் பாகிஸ்தான் பிரதமர் முன்பாக பிரதமர் மோடி பேச்சு!

"பயங்கரவாத கட்டமைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தகர்க்க வேண்டியது தற்போதைய காலகட்டத்தின் அவசரத் தேவை"

பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

கிர்கிஸ்தான் நாட்டின் பிக்பேக் நகரில் நடைபெற்று வரும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் உலகத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஒரே குரலில் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பயங்கரவாத விவகாரத்தில் எந்தவொரு நாட்டிற்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றும், இந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடுமையான எச்சரிக்கை

பயங்கரவாதத்தைக் கொள்கை அளவிலான ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும் ஆதரவும் அளிக்கும் அமைப்புகளுக்கும் உலக நாடுகள் தெளிவான செய்தியைச் சொல்ல வேண்டும் என்று பிரதமர் கூறினார். பயங்கரவாதம் என்பது எந்தவொரு நாட்டிற்கும் உத்தி சார்ந்த சொத்தாக மாற முடியாது என்பதை சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாத கட்டமைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தகர்க்க வேண்டியது தற்போதைய காலகட்டத்தின் அவசரத் தேவை என்று குறிப்பிட்டார்.

அமைதியை முன்னிறுத்திய பேச்சு

பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சர்வதேச அளவில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும், அமைதியையும் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல உறுதியான கொள்கை முடிவுகள் அவசியம் என்பதை இந்த உச்சிமாநாட்டு உரையின் மூலம் இந்தியா மீண்டும் நிலைநாட்டியுள்ளது.