மணிப்பூரில் புதிதாக வெடித்துள்ள கலவரத்தில் சிக்கி இதுவரை உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு மைதேகி - குக்கி சமூகத்தினரிடையே மோதல் வெடித்திருந்த நிலையில், தற்போது மணிப்பூரின் மூன்று மலை மாவட்டங்களான காம்ஜோங், உக்ருல் மற்றும் காங்போக்பியில் நாகா - குக்கி சமூகத்தினரிடையே மோதல் வெடித்துள்ளது.
இதில் சிக்கி ஒரு பெண் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் நாகா சமூகத்திலும், இரண்டு குக்கி சமூகத்தினரும், ஒரு கோர்க்கா விவசாயும் உயிரிழந்தவர்களுள் அடங்குவர்.
இந்த சமீபத்திய வன்முறைச் சம்பவம், இந்த ஆண்டு மணிப்பூரில் நடந்த மிகக் கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
முதலமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங், இரு சமூகத்தினரும் அமைதியையும், நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக, மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் மணிப்பூர் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
கம்ஜோங் மாவட்டத்தின் சாசாத் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு 42 வயதுப் பெண் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்திய வன்முறை வெடித்தது. இந்த மாவட்டத்தில் நாகா இன மக்கள் பெரும்பான்மையாக வசித்தாலும், சாசாத் ஒரு குக்கி இனப் பெரும்பான்மை கிராமமாகும்.
இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாயான டோம்கோனி தௌதாங் என அடையாளம் காணப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரது கொலையைத் தொடர்ந்து, குக்கி மற்றும் நாகா சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த மோதல் சனிக்கிழமையன்றும் தொடர 23 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 10 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
சனிக்கிழமையன்று காங்போக்பி மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், இரண்டு காவலர்களும், ஒரு தனிநபரும் கொல்லப்பட்டனர். மேலும் 52 வயது நபர் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு தாக்குதலில், காம்ஜோங் மாவட்டத்தில் உள்ள நிங்சோ கிராமத்தில், 35 வயதான நங்காச்சான்சோ நிங்ஷென் மற்றும் 48 வயதான லெய்ஷிஷான் லெய்ஷடாங் என அடையாளம் காணப்பட்ட இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே உக்ருல் மாவட்டத்தில் சந்தீப் ராய் என அடையாளம் காணப்பட்டுள்ள 40 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் தகவல்களின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குக்கி மற்றும் நாகா சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதல்களில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.