இந்தியா

பத்து ஆண்டுகளுக்கு முன் பேசினோம்: இளவரசர் வில்லியமுடன் கிரிக்கெட் அனுபவம் பற்றி சச்சின் டெண்டுல்கர்

வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.

புகழ்பெற்ற முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், நேற்று (திங்கள்கிழமை) மும்பையில் உள்ள பல்லார்ட் எஸ்டேட்டில், வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியான வில்லியம் மற்றும் கேட் ஆகியோருடன் இணைந்து, கலகலப்பான தெரு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டார். அந்த மூவரும், அந்த கேளிக்கை நிறைந்த செயல்பாட்டில் பங்கேற்றபோது, ​​அங்கு கூடியிருந்த பள்ளி மாணவர்களை சந்தித்தனர்.

அந்த சந்திப்பு குறித்து நினைவுகூர்ந்த டெண்டுல்கர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரச தம்பதியினரை சந்தித்து அவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதாக கூறினார். அடுத்த முறை சந்திக்கும்போது ஒன்றாக தெரு கிரிக்கெட் விளையாடுவது குறித்து அவர்கள் பேசியிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

உன்னதமான காரியம்:

"நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சந்தித்ததை போலவே, 'தற்போது நாம் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுகிறோம், அடுத்த முறை தெரு கிரிக்கெட்டும் விளையாடுவோம்' என்று அப்போதே நான் கூறியிருந்தேன். அதன்படி, அவர் வந்து தெரு கிரிக்கெட் விளையாடி, குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டார். இது ஒரு சிறந்த விஷயம்," என்று அரச குடும்ப உறுப்பினர்களுடனான தனது சந்திப்பிற்கு பிறகு டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

"இருப்பினும், இங்கே ஒரு பெரிய நோக்கம், ஒரு பெரிய குறிக்கோள் இருக்கிறது. அரச குடும்பம் எடுத்துள்ள இந்த முயற்சி, மிகவும் உன்னதமான ஒரு காரியம் என்று நான் நினைக்கிறேன். பல சவால்களை சந்தித்து வரும் இந்த பூமியில் நாம் நேர்மறையான சில மாற்றங்களை செய்து, வருங்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த இடத்தை உருவாக்கக்கூடிய இந்த பயணத்தில், ஒட்டுமொத்த உலகமும் இணைந்துள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமருடன் சந்திப்பு:

இந்த அமர்வின் போது டெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அவர் இளவரசர் வில்லியமுக்கு எதிராக பேட்டிங் செய்து, பின்னர் கேட்-க்கு பந்து வீசினார், அதே நேரத்தில் அரச தம்பதியினரும் பேட்டிங் செய்தனர். பள்ளி மாணவர்கள் இந்த மூவரின் விளையாட்டை ரசித்துக்கொண்டே அவர்களை உற்சாகப்படுத்தினர்.

வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இன்று (செவ்வாய் கிழமை) நடைபெறவுள்ள ஆறாவது வருடாந்திர எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் மும்பை வந்தடைந்தனர். விழாவை தொடர்ந்து, அரச தம்பதியினர் டெல்லிக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நாளை (புதன்கிழமை) சந்திக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT