இந்தியா

தடை எதையும் தடுக்கவில்லை; வினாத்தாள் கசிவு வேறு செயலிகளுக்கு மாறியுள்ளது: டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் அதிரடி

வினாத்தாள் கசிவு என்பது தேர்வு முகமையின் உள்ளே இருக்கும் நபர்களால் நடப்பதே தவிர, செயலியால் அல்ல

இந்தியா முழுவதும் நீட்-யுஜி மறுதேர்வு ஜூன்.21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் 22ஆம் தேதி டெலிகிராம் செயலியை தடைசெய்துள்ளது மத்திய அரசு. மேலும் மெசேஜ்களை எடிட் செய்யும் ஆப்சனையும் ஜூன். 30ம் தேதி வரை முடக்கியுள்ளது.

டெலிகிராம் மூலம் போலி செய்திகள் வேகமாகப் பரப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரு செயலியை முடக்கினால் மற்றொரு செயலியில் பகிர்வுகள் நடக்கப்போகிறது, இதற்கெதற்கு தடை என டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு விதித்த இந்தத் தடை எதையும் நிறுத்தவில்லை. இந்தத் தடையால் வினாத்தாள் கசிவுகள் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக, அவை அப்படியே பிற செயலிகளுக்கு மாறியுள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தத் தற்காலிகத் தடையானது வினாத்தாளைக் கசியவிட்ட உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை. மாறாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களைத்தான் இது தண்டித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வினாத்தாள் கசிவு என்பது தேர்வு முகமையின் உள்ளே இருக்கும் நபர்களால் நடப்பதே தவிர, செயலியால் அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.