ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல் சியசை தாண்டி பதிவாகி வருவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானாவில் வருகிற 16-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 41 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
அடிலாபாத், ஆசிபாபாத், நிஜாமாபாத், ஜாகிடியல், மஞ்சேரியல், கரீம்நகர், பூபாலப்பள்ளி, நல்ெகாண்டா, சூர்யாபேட்டை மற்றும் கட்வால் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
ஐதராபாத்தில் தொடர்ந்து சுமார் 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நிலவும். அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.
நிஜாமாபாத்தில் உள்ள மச்செர்லா கிராமத்தில், மிக அதிகபட்ச வெப்பநிலையாக 43.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதனைத் தொடர்ந்து, நல்கொண்டாவில் உள்ள கன்பூர் கிராமத்தில் 43.1 டிகிரி, ஐதராபாத்தில் 40.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதேபோல ஆந்திராவிலும் கடும் வெப்ப அலை நிலவ வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.