தெலுங்கானா மாநில உருவாக்கத்தில் பங்காற்றிய தலைவர் பெத்தி சுதர்ஷன் ரெட்டி காலமானார். அவருக்கு வயது 51.
2014 இல் ஆந்திரா - தெலுங்கானா தனித்தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டதன் பின்னால் பல ஆண்டுகளாக போராட்டங்களின் வரலாறு அடங்கியுள்ளது.
இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்).
ஐதராபாத்தை தலைமை இடமாக கொண்டு உருவான தெலுங்கானாவுக்கு முதல் இரண்டு ஆட்சிக் காலத்தில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் ஆட்சியே நடைபெற்றது. 2023 இல் முதல் முறையாக காங்கிரஸ் வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வர் ஆனார்.
பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும் தெலங்கானாவின் நர்சம்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெத்தி சுதர்ஷன் ரெட்டிக்கு கடந்த வாரம் ஹனுமகோண்டாவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு 5 நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1974இல் வாரங்கல் மாவட்டத்தின் நல்லபெல்லி கிராமத்தில் பிறந்த பெத்தி சுதர்ஷன் ரெட்டி, நல்லபெல்லி மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
2001இல் பிஆர்எஸ் தொடங்கப்பட்டபோது (அப்போது தெலுங்கானா ராஷ்டிர சமிதி) அதில் இணைந்தார். 2006 முதல் 2014 வரை வாரங்கல் மாவட்ட பிஆர்எஸ் தலைவராகப் பணியாற்றியதுடன் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
தனித் தெலுங்கானா மாநில உருவாக்கப் போராட்டங்களில் வாரங்கல் மாவட்டத் தலைவராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.
சந்திரசேகர் ராவின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் நர்சம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
2018 தேர்தலில் நர்சம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2023 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட போதிலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
ஹனுமகோண்டாவில் வசித்து வந்த சுதர்ஷன் ரெட்டிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அவரது மறைவுச் செய்தி பிஆர்எஸ் தொண்டர்கள் மற்றும் வாரங்கல் மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.