இந்தியா

டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் மறுநியமனம்: மும்பை உயர் நீதிமன்றத்தை நாட டாடா அறக்கட்டளைகள் முடிவு!

அறக்கட்டளைகளின் கூட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள இந்த அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடா, சந்திரசேகரனின் மறுநியமனத்தை எதிர்த்த நிலையில், மற்றொரு நியமன இயக்குநரான வேணு சீனிவாசன் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக என். சந்திரசேகரனை இரண்டாவது முறையாக ஐந்து ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்ததற்கு எதிராக, சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் ஆர்.டி. டாடா அறக்கட்டளை ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளன.

டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் ஆறு இயக்குநர்களுக்கு எதிராகத் தொடரப்பட உள்ள இந்த வழக்குகளில், சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை ரூ.50 கோடியும், ஆர்.டி. டாடா அறக்கட்டளை ரூ.15 கோடியும் என மொத்தம் ரூ.65 கோடி இழப்பீடும், அதனுடன் ஆண்டுக்கு 18 சதவீத வட்டியும் கோர உள்ளன. கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அனுப்பப்பட்ட கடிதங்களுக்குத் திருப்திகரமான பதில்கள் கிடைக்காததைத் தொடர்ந்து, நேற்று இரவு நடைபெற்ற அறக்கட்டளைகளின் கூட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விதிமுறை மீறல் புகார் என்ன?

டாடா சன்ஸ் நிறுவனத்தின் சங்க விதிகளின் பிரிவு 121-இன் கீழ், அறக்கட்டளைகளால் நியமிக்கப்பட்ட இயக்குநர்களின் போதிய ஆதரவு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 17-ஆம் தேதி வாரியத் தீர்மானம் செல்லாது என அறக்கட்டளைகள் வாதிடுகின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள இந்த அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடா, சந்திரசேகரனின் மறுநியமனத்தை எதிர்த்த நிலையில், மற்றொரு நியமன இயக்குநரான வேணு சீனிவாசன் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தார்.

உடனடி நிவாரணம் கோரிக்கை

வாரிய முடிவுகளை வெறும் இயக்குநர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துத் தீர்மானிக்க முடியாது என்றும், அறக்கட்டளைகளின் நியமன இயக்குநர்களில் பெரும்பான்மையோரின் ஒப்புதல் கட்டாயம் என்றும் அறக்கட்டளைகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, செப்டம்பர் 17 தீர்மானத்திற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை எனக் கூறியுள்ள அறக்கட்டளைகள், வரும் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்தில் இயக்குநர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தலைவர் தனது சிறப்பு வாக்கை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உடனடி நிவாரணம் கோர உள்ளன.

SCROLL FOR NEXT