இந்தியா

சமூக வலைதளங்களில் பழகி பெற்றோர் இல்லாத சிறுமிகளை வீழ்த்தி கற்பழித்த வாலிபர்

சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து விட்டு தலைமறைவானார். வாலிபர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுடன் சமூக வலைதளங்களில் பழகி, பின்பு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கஜக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு, மலப்புரம் அருகே உள்ள பெரிந்தால் மன்னா வெங்காடு பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது20) என்ற வாலிபருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் மூலம் பேசி வந்த இருவரும் நேரிலும் சந்தித்து பழகி வந்துள்ளனர். அப்போது வாலிபர் கோகுல் காதலிப்பதாக கூறி சிறுமியை பல இடங்களுக்கு காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அவ்வாறு அழைத்துச் செல்லும் போது, சிறுமியை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து விட்டு தலைமறைவானார். இது குறித்து கஜக்கூட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கருநாக பள்ளி பகுதியில் அவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பல முறை பலாத்காரம் செய்ததும், நகைகளை பறித்ததும் உறுதியானது. மேலும் அவர் இது போன்று பல சிறுமிகளை காதலிப்பதாக கூறி தனது வலையில் வீழ்த்தி உள்ளார்.

அவர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுடன் சமூக வலைதளங்களில் பழகி, பின்பு அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கோகுலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.