காங்கிரஸ் 
இந்தியா

உத்தரகாண்ட் தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்

வருகிற சட்டசபை தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் தற்போதிலிருந்து தயாராகி வருகிறது. இதற்கான வேட்பாளர் தேர்விலும் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

மாலை மலர்

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இம்மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்முறையும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார்.

மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து, கடந்த தேர்தல் வரை காங்கிரசும், பா.ஜனதாவும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன.

வருகிற தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் தற்போதிலிருந்து தயாராகி வருகிறது. இதற்கான வேட்பாளர் தேர்விலும் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டது. அவர்களிடம் நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆராய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத், மாநிலத் தலைவர் கணேஷ் கோதியால், பிரீதம்சிங் மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்தனர். இந்த பட்டியல் டெல்லி காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த தேர்தலில் யாருடைய சிபாரிசும் இல்லாமலும், குடும்ப பின்னணி குறித்து ஆராய்ந்தும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.