உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் இன்று முதல் மார்ச் 7-ந்தேதி வரை சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் முதல் கட்டமாக பிப்ரவரி 10-ந்தேதி 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 58 தொகுதிகளும் ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத்தூர் நகர், முசாபர் நகர், மீரட், காஜியாபாத், புலந்த் சாஹர், அஸிகர், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களில் அமைந்துள்ளன.
இந்த 58 தொகுதிகளில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள 9 மந்திரிகள் போட்டியிடும் தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 58 தொகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
இன்று (வியாழக்கிழமை) 58 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக அதிகாலை முதலே வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வரத் தொடங்கினார்கள். பல இடங்களில் மக்கள் 7 மணிக்கு முன்பே நீண்ட வரிசையில் நின்றனர்.
இதனால் 58 தொகுதிகளிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி முதல் இரண்டு மணி நேரத்தில் 8 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
11 மணி நிலவரப்படி 20.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக ஷாம்லி மாவட்டத்தில் 22.83 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
ஷாம்லி - 22.83%
முசாபர் நகர் - 22.65%
மீரட் - 18.54%
பாக்பத் - 22.30%
காஜியாபாத் - 18.24%
ஹாபூர் - 22.80%
கவுதம் புத்தூர் நகர் - 19.23%
புலந்த் சாஹர் - 21.62%
அஸிகர் - 17.91%
மதுரா - 20.73%
ஆக்ரா - 20.03%
பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்...கேரளாவில் புதன்கிழமை தோறும் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய உத்தரவு