பெண் 
இந்தியா

ஆந்திராவில் இளம்பெண்களுக்கு காதல் வலைவீசி ரூ.3.50 கோடி மோசடி செய்த வாலிபர்

கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களிடம் ரூ.3.50 கோடி பணத்தை வாலிபர் பறித்து உள்ளது தெரிய வந்தது.

மாலை மலர்

திருப்பதி:

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது31). இவர் கடந்த 2014-ம் ஆண்டு பி.டெக் முடித்து விட்டு ஐதராபாத்திற்கு வேலை தேடி வந்தார்.

ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது ஓட்டலில் வேலை செய்பவர்கள் வம்சி கிருஷ்ணாவுக்கு நண்பர்களாகினர். அவர்களுடன் சேர்ந்து குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவது மற்றும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் வம்சி கிருஷ்ணாவுக்கு பணத்தேவை அதிகரித்தது. இதையடுத்து ஓட்டலில் வேலையை விட்டுவிட்டு மற்றொருவர் டிராவல்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலை தேடி வந்த இளம்பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், காதலிப்பதாகவும் ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்துள்ளார்.

மேலும் ஹர்ஷவர்தன் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கினார். அதில் தொடர்பு கொண்ட ஆண்களிடம் வம்சி கிருஷ்ணா பெண்கள் குரலில் பேசி அவர்களிடமிருந்து பணத்தைப் பறித்துள்ளார்.

ஹர்ஷவர்த்தன் இன்ஸ்டாகிராமில் பேசிய இளம்பெண்களிடம் தான் கோடீஸ்வரர் வீட்டு மகன் என்றும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

பெண்களின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார். அப்போது தனது வங்கிக் கணக்கு முடக்கி உள்ளதால் தனது நண்பர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு பெண்களிடம் பேசி லட்சக்கணக்கில் பணத்தை பறித்துள்ளார்.

மேலும் எம்.எல்.ஏ. ஒருவர் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கினார். அதில் வம்சி கிருஷ்ணாவை அணுகினால் அவர் வேலை வாங்கித் தர ஏற்பாடு செய்வார் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் பணம் பறித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களிடம் ரூ.3.50 கோடி பணத்தை பறித்து உள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து ஹைதராபாத் கூகெட் போலீசில் 60-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வம்சி கிருஷ்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.